சென்னை: எம்.ஜி.ஆர். கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆர்.எம்.வீரப்பன் தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமானவர். இவர், எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமாவார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். அதிமுக தலைவராக இருந்தபோதிலும், திமுக தலைவர்களுடனும் நட்பு பாராட்டி வருகிறார்.
அவரது 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கே சென்று ஆர்.எம்.வீரப்பனுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. ஜெகத் ரட்சகன் ஆகியோரும் உடனிருந்தனர்.